செய்தி வெளியீடு எண் : 150 நாள் : 10.11 .2017 சேலம் மாவட்டம் முழுவதும் 41 ஆயிரம் களப்பணியாளர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளால் டெங்குவினால் ஏற்பட்ட பாதிப்புகள் முழுவதும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ரோஹிணி ரா. பாஜிபாகரே இ.ஆ.ப., அவர்கள் தகவல்

செய்தி வெளியீடு எண் : 150 நாள் : 10.11 .2017 சேலம் மாவட்டம் முழுவதும் 41 ஆயிரம் களப்பணியாளர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளால் டெங்குவினால் ஏற்பட்ட பாதிப்புகள் முழுவதும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ரோஹிணி ரா. பாஜிபாகரே இ.ஆ.ப., அவர்கள் தகவல்

சேலம் மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளில் 41 ஆயிரம் களப்பணியாளர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளால் டெங்குவினால் ஏற்பட்ட பாதிப்புகள் முழுவதும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என அஸ்தம்பட்டி மண்டலம் கோட்டம் எண் 14 ல் உள்ள காந்தி மைதானத்தில் 10.11.2017 அன்று  நடைபயிற்சியாளர்கள் , மூத்த குடிமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுடனான டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த கலந்தலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ரோஹிணி ரா. பாஜிபாகரே இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார். 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில், சேலம் மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்ததன் அடிப்படையில், தற்போது மாவட்டத்தில் டெங்குவினால் ஏற்பட்ட பாதிப்புகள் முழுவதும் கட்டுப்பாட்டுக்குள்  கொண்டு வரப்பட்டுள்ளது.  இப்பணிகளை நகராட்சி நிர்வாகங்கள் துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுசுகாதாரத்துறை , கல்வித்துறை ஆகிய துறைகளை ஒருங்கிணைத்து, களப்பணிகள் மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.  அதனடிப்படையில் மாநகராட்சி , நகராட்சி , பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் 41 ஆயிரம் களப்பணியாளர்கள் தினசரி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வீடு , வீடாக சென்று  டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டனர். 

மேலும் 12 அரசு பொதுமருத்துவமனைகள், 1 மருத்துவ கல்லூரி மருத்துவமனை, 20 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும்  புறநகர் பகுதிகளிலுள்ள 83 ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் 24 மணி நேரமும் மருத்துவ அலுவலர்கள் மற்றும் செவிலியர்கள் பணியாற்றிட நடவடிக்கை எடுக்கப்பட்டதன் காரணமாக, உரிய சிகிச்சைகள்  உடனுக்குடன் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.   பொதுமக்களும் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என்று பல முறை மாவட்ட நிர்வாகம்  மற்றும் மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியன் பேரில், தற்பொழுது களப்பணியாளர்களுக்கு தேவையான ஒத்துழைப்பினை பொதுமக்கள் வழங்கி வருவது பாராட்டுக்குரியதாகும். மேலும் பள்ளி மாணவ, மாணவியர்கள் மூலம் பெற்றோர்களுக்கு டெங்கு தடுப்பு பணிகளை நினைவூட்டிடும் வகையில், தினசரி வகுப்பாசிரியர்கள் வீட்டுப்பாடங்களை குறிப்பிட்டு அனுப்பும் கையேடுகளில்  டெங்கு தடுப்பு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.   இந்நிலையில் மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களை டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளுக்கு தூதுவர்களாக நியமித்து, கூடுதல் கவனத்துடன் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளை மாவட்டம் முழுவதும் மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.  

சமூக பொறுப்புகளை சிரத்தையோடு செயல்படுத்துவதில் எப்பொழுதுமே அரசுக்கு உறுதுணையாக இருந்து வரும், மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தங்களது பகுதிகளில் உள்ள வீடுகளில் டெங்கு தடுப்பு பணிகளை மேற்கொள்ள முன்வரவேண்டும். தண்ணீர் சேகரிக்கும் பாத்திரங்கள் , டிரம்கள் ஆகியவற்றை உரிய கால அளவில் சுத்தம் செய்து, பாதுகாப்பான வகையில் மூடிவைத்து பயன்படுத்த வேண்டும் எனவும், வீட்டின் சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரித்து, தேவையற்ற பொருட்களை உடனே அப்புறப்படுத்திட பொதுமக்களுக்கு அறிவுறுத்திட வேண்டும். சிறப்பாக டெங்கு தடுப்பு பணிகளை மேற்கொள்ளும் மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களை அடையாளம் கண்டு, அவர்களை நேரில் அழைத்து  சிறப்பிக்கும்  நடவடிக்கைகளை  மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும்.  எனவே அனைவரும் தங்களது பகுதிகளில் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக் கொண்டார். 

பின்னர் கொண்டலாம்பட்டி மண்டலம் கோட்டம் எண் 48 ல் சுண்ணாம்புக்காரத் தெருவில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளை ஆய்வு செய்தார்.  அங்கு பள்ளி செல்லும் குழந்தைகள் மூலம் பெற்றோர்களுக்கு டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த விவரங்களை தெரிவிக்க வைத்தார்.  டெங்கு தடுப்பு குறித்த விவரங்களை தெளிவாக எடுத்துரைத்த மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டார்.  

இவ்வாய்வின் போது உதவி ஆணையாளர் திரு. மு. கணேசன், சேலம் தெற்கு வட்டாட்சியர் திருமதி .கே. பத்மபிரியா , மாநகர நல அலுவலர் மரு.வி. பிரபாகரன், உதவி செயற்பொறியாளர் ஆர். செந்தில் குமார், வட்ட வழங்கல் அலுவலர் திரு.  கே. நாகூர் மீரான், உதவி பொறியாளர்கள் திரு.ஜெ. ஓபுளி சுந்தர், திரு. வி. ரவிச்சந்திரன், சுகாதார அலுவலர் திரு.எம். சேகர், சுகாதார ஆய்வாளர்கள் திரு. கே. சித்தேஸ்வரன், திரு. த. ஆனந்த குமார் ஆகியோர் உடன் இருந்தனர். 
-----------------------------------------------------------------
வெளியீடு : மக்கள் தொடர்பு அலுவலகம், சேலம் மாநகராட்சி.