Commissioner Inagurated Dengue Awareness Rally

Commissioner Inagurated Dengue Awareness Rally

டெங்கு தடுப்பு பணிகள் குறித்த விழிப்புணர்வு பேரணியை
தனி அலுவலர் மற்றும்  மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள்  (19.7.2017) அன்று துவக்கி வைத்தார்

சேலம் மாநகராட்சியில் டெங்கு தடுப்பு பணிகள் குறித்த விழிப்புணர்வு பேரணியை  தனி அலுவலர் மற்றும்  மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள்  (19.7.2017) அன்று சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் துவக்கி வைத்தார்.
சேலம் மாநகராட்சி பகுதிகளில் டெங்கு தடுப்பு குறித்த விழிப்புணர்வு பணிகள் பல்வேறு நிலைகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் பொது மக்களிடையே டெங்கு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாகவும், டெங்கு பரவுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விவரங்களை தெரிவித்திடும் வகையில் பள்ளி மாணவ,மாணவியர்களைக் கொண்ட விழிப்புணர்வு பேரணி நடத்திட திட்டமிடப்பட்டு இன்று 19.7.2017 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட பேரணி துவக்கி வைக்கப்பட்டது.
பேரணியை துவக்கி வைத்து ஆணையாளர் அவர்கள் பேசியதாவது :-
டெங்கு தடுப்பு குறித்த விவரங்கள் மாணவ, மாணவியர்களை சென்றடைந்தால் அவர்கள் மூலம் அனைத்து பொது மக்களுக்கு எளிதாக சென்றடையும் என்ற அடிப்படையில் இப்பேரணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது.  மாணவ, மாணவியர்கள் தங்கள் வீடுகளை சுத்தமாக வைத்துக் கொள்வதற்கும். தேவையற்ற  பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்தி வீடுகளை தூய்மையாக வைத்துக் கொள்ள தங்களது பெற்றோர்களுக்கு நினைவு படுத்திட வேண்டும்.  மேலும் பள்ளி வளாகங்களையும் தூய்மையாக பராமரிப்பதற்கு மாணவ, மாணவியர்கள் ஒத்துழைப்பு அளித்திட வேண்டும்.  டெங்கு நோய் பரப்பக்கூடிய கொசுக்கள் அவற்றினால் ஏற்படும் தீமைகள் மற்றும் டெங்கு தடுப்பு குறித்த விவரங்களை உள்ளடக்கிய துண்டு பிரசுரங்கள், ஒட்டு வில்லைகள் மாணவ, மாணவியர்களிடையே வழங்கப்பட்டுள்ளது.  இவைகளை தங்களது வீடுகளில் ஒட்டி வைத்து தூய்மையான சுற்றுச்சூழலை ஏற்படுத்திட பெற்றோர்களுக்கு உறுதுணையாக இருந்திட வேண்டும்.
மேலும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள 60 கோட்டங்களிலும் டெங்கு தடுப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.  கைத்தெளிப்பான்கள் மற்றும் வாகனத்தெளிப்பான்கள் மூலம் அனைத்து பகுதிகளிலும் கொசு மருந்து அடிக்கப்பட்டு வருகிறது.  அனைத்து மேல் நிலை நீர்த்தேக்க தொட்டிகளிலும் தேவையான அளவுகள் குளோரின் கலந்து பொது மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தேநீர் கடைகள் , குளிர்பான கடைகள் மற்றும் உணவகங்களில் வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பாக உள்ளதா என்பதனை மாநகர சுகாதார அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.  மேலும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள தண்ணீர் சேகரிக்கும் தொட்டிகள், பூந்தொட்டிகள்   ஆகியவற்றை முறையாக பராமரிப்பதற்கு ஏதுவான அறிவுரைகளை பொதுமக்களுக்கு சுகாதார அலுவலர்கள் வழங்கி வருகிறார்கள். பழைய டயர்கள் , உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள் போன்ற  தேவையற்ற பொருட்களை குடியிருப்பு பகுதிகளிலிருந்து அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கையும் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது.  பொதுமக்களும் பொது சுகாதாரம் கருதி மாநகராட்சி நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து சேலம் மாநகராட்சி தூய்மையான மாநகராட்சியாக திகழ்வதற்கு ஒத்துழைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது என ஆணையாளர் தெரிவித்தார். இப்பேரணியில் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி கோட்டை மற்றும் மாநகராட்சி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி கோட்டை ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். இப்பேரணி  மாநகராட்சி மைய அலுவலகத்திலிருந்து (தொங்கும் பூங்கா) துவங்கி பிரட்ஸ் ரோடு,  முள்ளுவாடி கேட், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் , திருவள்ளுவர் சிலை வழியாக  பள்ளியை சென்றடைந்தது.
இப்பேரணியில் செயற்பொறியாளர்கள் திரு.அ.அசோகன், திரு.ஆர். ரவி, உதவி ஆணையாளர்கள் திரு.நா. சத்தியநாராயணன், திரு.ப.ரமேஷ்பாபு, திரு.ஏ.ஆர்.ஏ.ஜெயராஜ், திரு.க.ராஜா, திருமதி.ப. ரங்கநாயகி மற்றும் பள்ளிகளின் ஆசிரியர், ஆசிரியைகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.