செய்தி வெளியீடு எண் : 146 நாள் : 03.11 .2017 பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நிறைவுற்ற பகுதிகளில் ரூ.74 கோடியே 33 இலட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகள் வடகிழக்கு பருவமழைக்கு பின் தொடங்கும் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் தகவல்

செய்தி வெளியீடு எண் : 146 நாள் : 03.11 .2017 பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நிறைவுற்ற பகுதிகளில் ரூ.74 கோடியே 33 இலட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகள் வடகிழக்கு பருவமழைக்கு பின் தொடங்கும் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் தகவல்

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட 4 மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள்  நிறைவுற்ற   பகுதிகளில் ரூ. 74 கோடியே 33 இலட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகள் வடகிழக்கு பருவமழைக்கு பின் தொடங்கும் என 03.11.2017 அன்று  மாநகராட்சி மைய அலுவலகத்தில் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம், பி.எஸ்.என்.எல் மற்றும் தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்பு கூட்டத்தில்  மாநகராட்சி ஆணையாளர் திரு. ரெ. சதீஷ் அவர்கள் தெரிவித்தார். 
சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலத்தில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முடிக்கப்பெற்ற 26.055 கிலோ மீட்டர் அளவிலான 45 சாலைப்பணிகள் ரூ. 15 கோடியே 97 இலட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டிலும், அஸ்தம்பட்டி மண்டலத்தில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முடிக்கப்பெற்ற 58.660 கிலோ மீட்டர் அளவிலான 111 சாலைப்பணிகள் ரூ. 36 கோடியே 30 இலட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டிலும், அம்மாபேட்டை மண்டலத்தில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முடிக்கப்பெற்ற 15.429 கிலோ மீட்டர் அளவிலான 56 சாலைப்பணிகள் ரூ 8 கோடியே 25 இலட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டிலும்,  கொண்டலாம்பட்டி மண்டலத்தில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முடிக்கப்பெற்ற 20.174 கிலோ மீட்டர் அளவிலான 56 சாலைப்பணிகள் ரூ. 13 கோடியே 81 இலட்சத்து 15 ஆயிரம் என மொத்தம் 120.318 கிலோ மீட்டர் அளவிலான 268 பணிகள் ரூ. 74 கோடியே 33 இலட்சத்து 85 ஆயிரம் மதிப்பீட்டில் சாலைப்பணிகள் வடகிழக்கு பருவமழை முடிவுற்ற பின்னர் நடைபெறும்.
 
இச்சாலைப்பணிகள் துவங்குவதற்கு முன்னதாக தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், பி.எஸ்.என்.எல் மற்றும் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள்  கேபிள் பதிக்கும் பணிகள், பராமரிப்பு பணிகள் ஆகியவற்றை  மேற்கொள்ளப்பட  வேண்டும். சாலைப்பணிகள் முடிவுற்ற பின்னர், எக்காரணத்தைக் கொண்டும் கேபிள் பதிக்கும் பணிகளோ அல்லது பிற பராமரிப்பு பணிகளையோ மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.  
 
மேலும்  வீடுகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு குடிநீர் இணைப்பு வேண்டுவோர், பாதாள சாக்கடை திட்டத்தில் கழிவு நீர் இணைப்பு வேண்டுவோர் உடனடியாக விண்ணப்பித்து, இணைப்புகளை  பெற்றுக் கொள்ள வேண்டும்.  சாலைப்பணிகள் முடிக்கப்பெற்ற பின்னர் குடிநீர் இணைப்பு, கழிவு நீர் இணைப்பு போன்றவைகள் வழங்கப்படமாட்டாது. சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டுப் பகுதிகளில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சாக்கடை கால்வாய்களை அடைத்து மழை நீர் தேங்கும் வகையில் தங்களது நிறுவனத்தின் கேபிள்களை  அமைக்கக்கூடாது , மழைநீர் தங்குதடையின்றி செல்வதற்கு ஏதுவாக, மாநகராட்சி பொறியியல் பிரிவின் ஆலோசனைக்கு ஏற்ப கேபிள்களை பதிக்க வேண்டும் என ஆணையாளர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் செயற்பொறியாளர்கள் திரு.அ.அசோகன், திரு.ஜி. காமராஜ், தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் செயற்பொறியளர்கள் திருமதி. பி. புஷ்பம், திருமதி. என். குணவர்த்தினி திரு.எ. மௌலீஸ்வரன், உதவி ஆணையாளர்கள் திரு.நா. சத்திய நாராயணன், திரு.மு. கணேசன், திரு.ஏ.ஆர்.ஏ. ஜெயராஜ், திரு.ப.ரமேஷ்பாபு, பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் முதுநிலை மண்டல பொறியாளர்கள்  திரு.கே. சுப்பிரமணியன், திரு.எஸ்.எம். ரஹிம்தீன், திரு.எஸ். அர்த்தனாரி , திரு.கே. செல்வராஜ், திரு. சந்திரசேகரன், மண்டல பொறியாளர்கள் திரு.எம். பாஸ்கரன், திரு.என். செந்தமிழ்ச்செல்வன், உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் தனியார் தொலைத்தொடர்பு நிறுவன அலுவலர்கள்  உள்பட பலர் கலந்து கொண்டனர். 
 
-------------------------------------------------------------
வெளியீடு : மக்கள் தொடர்பு அலுவலகம், சேலம் மாநகராட்சி.