செய்தி வெளியீடு எண் : 142 நாள் : 01.11 .2017 பல முறை வேண்டுகோள் விடுத்தும் டெங்கு தடுப்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ரோஹிணி ரா.பாஜிபாகரே இ.ஆ.ப., அவர்கள் தகவல்

செய்தி வெளியீடு எண் : 142 நாள் : 01.11 .2017 பல முறை வேண்டுகோள் விடுத்தும் டெங்கு தடுப்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ரோஹிணி ரா.பாஜிபாகரே இ.ஆ.ப., அவர்கள் தகவல்

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட சூரமங்கலம் மண்டலம் கோட்டம் எண் 25 ராவனேஸ்வரன் நகர் , சித்தகவுண்டர் காடு மற்றும் கோட்டம் எண் 27 ல் சின்னப்பன் தெரு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு தடுப்பு மற்றும்  விழிப்புணர்வு பணிகளை  01.11.2017 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர். திருமதி. ரோஹிணி  ரா.பாஜிபாகரே இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு செய்தார். 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில், சேலம் மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும்  கல்லூரி மாணவ, மாணவியர்களைக் கொண்டு விழிப்புணர்வு பேரணிகள் நடத்தப்பட்டு  , துண்டு பிரசுரங்கள், ஒட்டு வில்லைகள் பொதுமக்களிடையே விநியோகிக்கப்பட்டது. 20 ஆயிரத்து 868  சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 8 இலட்சத்து 32 ஆயிரத்து 938 பேர் தங்களது உடல் நிலையை பரிசோதித்து , உரிய சிகிச்சை பெற்று பயன் அடைந்துள்ளனர்.  மேலும் பொதுமக்கள் அதிகம் கூடக்கூடிய இடங்களான பேருந்து நிலையங்கள், அம்மா உணவகங்கள், உழவர் சந்தைகள் , காய்கறி மார்க்கெட்டுகள், இரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் நிலவேம்பு குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.  மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி , கல்லூரி வளாகங்களிலேயே உரிய இடைவெளியில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. இதுவரை சேலம் மாவட்டத்தில் 01.7.2017 முதல் 25.10.2017 வரையிலான நாட்களில் 4 ஆயிரத்து 443  கிலோ அளவிலான நிலவேம்பு  பொடியிலிருந்து 1 இலட்சத்து 33 ஆயிரத்து 275 மி.லிட்டர் நிலவேம்பு குடிநீர் தயாரிக்கப்பட்டு, 25 இலட்சத்து 21 ஆயிரத்து 715 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் 12 அரசு பொதுமருத்துவமனைகள், 1 மருத்துவ கல்லூரி மருத்துவமனை, 20 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும்  புறநகர் பகுதிகளிலுள்ள 83 ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் 24 மணி நேரமும் மருத்துவ அலுவலர்கள் மற்றம் செவிலியர்கள் பணியாற்றிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  போலி மருத்துவர்களும் அடையாளம் காணப்பட்டு, கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு பல்வேறு பணிகளை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி  நிர்வாகமும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதனிடையே டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைத்தால் தான் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் முழுமையடையும் என்பதை கருத்தில் கொண்டு, பல முறை பொதுமக்களுக்கு டெங்கு தடுப்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் படி வேண்டுகோள் விடுக்கப்பட்டது. களப்பணியாளர்களை வீடுகளுக்குள் அனுமதிக்கும் படியும் அவர்கள் மேற்கொள்ளும் பணிகளை தடுக்கக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் சில பகுதிகளில் களப்பணியாளர்களை வீட்டிற்குள் அனுமதிக்காமல், டெங்கு தடுப்பு பணிகளை மேற்கொள்ள விடாமலும் இருப்பது மாவட்ட  நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.  ஆகையால் பொதுமக்களின் பொதுசுகாதார மேம்பாட்டு பணியினை கருத்தில் கொண்டு, டெங்கு தடுப்பு பணிகளுக்கு  ஒத்துழைப்பு வழங்காதவர்கள் மீது, கடும் நடவடிக்கைகள் சட்டபூர்வமாக எடுக்கப்படும்.  

மேலும் புற நகர் மற்றம் மாநகர பகுதிகளில் காலி மனை உரிமையாளர்களுக்கு ஏற்கனவே, சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் காலி மனைகளை சுத்தம் செய்து, தூய்மையாக வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தது. வணிக வளாகங்கள், தனியார் மருத்துவமனைகள், பஸ், லாரி பணிமனைகள், உணவகங்கள் , தங்கும் விடுதிகள், திரையரங்குகள் ஆகியவற்றின் உரிமையாளர்களுக்கு அவர்களது வளாகங்களை தூய்மையாக பராமரிப்பதற்கு பல முறை வேண்டுகோள் விடுக்கப்பட்டு, தகுந்த அறிவுரை வழங்கி சுத்தம் செய்வதற்கு போதிய கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.  ஆனால் சில பகுதிகளில் இப்பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாமல் இருப்பது, அலுவலர்களின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.  பொதுமக்களின் சுகாதாரத்திற்கு கேடு விளைவித்து, சுகாதார மேம்பாட்டு பணிகளுக்கு குந்தகம் விளைவிப்போர் மீது சட்டபூர்வமான  நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். 

உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் பொது சுகாதார வளாகங்கள், ஒருங்கிணைந்த சுகாதார வளாகங்கள் பொதுமக்களின் தேவைக்கேற்ப கட்டிமுடிக்கப்பட்டு பயன்பாட்டிற்காக கொண்டு வரப்பட்டுள்ளது.  பொதுமக்கள் சுகாதார மேம்பாட்டினை கருத்தில் கொண்டு, இவ்வளாகங்களை முழுமையாக  பயன்படுத்திட வேண்டும் என, தெரிவித்த மாவட்ட ஆட்சித்தலைவர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஏற்படுத்தப்பட்ட டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளால், மாணவ, மாணவியர்களின் வாழ்வியல் முறையில் மாற்றம் காணப்படுகிறது. ஆனால் பெற்றோர்களிடம் அம்மாற்றம் முழுமையாக ஏற்படவில்லை, எனவே பெற்றோர்கள் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு தொடர்பான விவரங்களை தங்களது குழந்தைகளிடம் கற்றுக் கொள்ள வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். 

 இவ்வாய்வின் போது செயற்பொறியாளர் திரு.ஆர்.ரவி,  மாநகர நல அலுவலர், மரு. வி. பிரபாகரன், தாய் சேய் நல அலுவலர் திருமதி. என். சுமதி, உதவி பொறியாளர் திருமதி வி. திலகா, சேலம் மேற்கு வட்டாட்சியர் திரு.வி. திருமாவளவன், சேலம் தெற்கு வட்டாட்சியர் திரு. பி.எஸ்.லெனின், சுகாதார அலுவலர்கள் மற்றும்  சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.   


வெளியீடு : மக்கள் தொடர்பு அலுவலகம், சேலம் மாநகராட்சி.