Commissioner Meeting Dengue Awareness

Commissioner Meeting Dengue Awareness

டெங்கு தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்
தனி அலுவலர் மற்றும்  மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள்  தலைமையில் (18.7.2017) அன்று நடைபெற்றது.

சேலம் மாநகராட்சியில் டெங்கு தடுப்பு பணிகள் மேற்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் தனி அலுவலர் மற்றும்  மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள்  தலைமையில் (18.7.2017) அன்று சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஆணையாளர் தெரிவித்ததாவது :-

 சேலம் மாநகராட்சி பகுதிகளில் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளை சுகாதாரத்துறையினர் முழு வீச்சில் மேற்கொள்ள வேண்டும்.  மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மேல் நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் அபேட் மருந்து ஊற்றுதல்,  தேவையான குளோரின் மருந்துகளை குடிநீரில் கலந்து பொது மக்கள் பாதுகாப்பான குடிநீர் பெறுவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும்.  பொது மக்களுக்கு டெங்கு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் விழிப்புணர்வு பணிகளை இடைவிடாது மேற்கொள்ள வேண்டும்.   
குறிப்பாக பயன்படாத டயர்கள், உடைந்த  பிளாஸ்டிக் பொருட்கள் போன்ற  தேவையில்லாத பொருட்களை பொது மக்கள் தங்கள் வசிக்கும் பகுதிகளில்   வைத்திருப்பதால் டெங்கு காய்ச்சலை பரப்பக்கூடிய கொசு உருவாகுகிறது என்ற கருத்தினை பொது மக்களுக்கு எடுத்துக் கூறி, தேவையற்ற  பொருட்களை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே டெங்கு தடுப்பு பணிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். மேலும் அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள உயர் மட்ட நீர்த்தேக்க தொட்டிகள் உரிய கால இடைவெளியில் சுத்தப்படுத்தப்பட்டுள்ளதா என்பதனை மாநகராட்சி சுகாதாரத்துறை அலுலவர்கள் கண்காணித்து வர  வேண்டும்.

மேலும் குடியிருப்பு பகுதிகளில் உரிய இடைவெளியில் கைத்தெளிப்பான்கள் மற்றும் வாகனங்கள் மூலம்  கொசு மருந்துகளை அடிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள  வேண்டும்.  பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்களான பேருந்து  நிலையங்கள், சந்தைப் பகுதிகள், தேநீர் விடுதிகள் மற்றும் உணவு விடுதிகளில் பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். தேவையான மருந்துகளை இருப்பில் வைத்திருக்க வேண்டும். பொது மக்கள் வீடுகளில் வைத்திருக்கக்கூடிய குளிர் சாதனப் பெட்டி, அழகிற்காக வளர்க்கப்படும் பூந்தொட்டிகள் போன்றவைகளை வாரம் ஒரு முறை சுத்தம் செய்வதற்கு அறிவுறுத்திட வேண்டும். மாநகராட்சி பகுதிகளில் செயல்படும் அம்மா உணவகங்களில் தினசரி நிலவேம்பு குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களிடையே டெங்கு நோய் தடுப்பு பணிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் துண்டு பிரசுரங்கள், ஒட்டு வில்லைகள் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
இக்கூட்டத்தில் செயற்பொறியாளர்கள் திரு.அ.அசோகன், திரு.ஜி. காமராஜ், திரு.ஆர். ரவி , உதவி ஆணையாளர்கள் திரு.நா. சத்தியநாராயணன், திருமதி.வி. திலகா, திரு.ஏ.ஆர்.ஏ. ஜெயராஜ், திரு.ப. ரமேஷ்பாபு, சுகாதார அலுவலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.