செய்தி வெளியீடு எண் :131, நாள் : 25.10.2017 டெங்கு தடுப்பு பணிகளை மேற்கொள்ளாமல் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் நிலையினை உருவாக்கிய எல்.ஆர்.என். தனியார் பேருந்து பணிமனை மற்றும் ஸ்ரீ சைதன்யா பள்ளிக்கு ரூ. 17 இலட்சம் அபராதம் விதிப்பு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ரோஹிணி ரா. பாஜிபாகரே இ.ஆ.ப., அவர்கள்

செய்தி வெளியீடு எண் :131, நாள் : 25.10.2017 டெங்கு தடுப்பு பணிகளை மேற்கொள்ளாமல் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் நிலையினை உருவாக்கிய எல்.ஆர்.என். தனியார் பேருந்து பணிமனை மற்றும் ஸ்ரீ சைதன்யா பள்ளிக்கு ரூ. 17 இலட்சம் அபராதம் விதிப்பு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ரோஹிணி ரா. பாஜிபாகரே இ.ஆ.ப., அவர்கள்

சேலம் மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும்  டெங்கு தடுப்பு பணிகளை 25.10.2017 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ரோஹிணி ரா.பாஜிபாகரே இ.ஆ.ப., அஸ்தம்பட்டி மண்டலத்தில் ஆய்வு செய்தார். 
இவ்வாய்வின் போது அஸ்தம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட கோட்டம் எண் 15 ல் உள்ள எல்.ஆர்.என். தனியார் வாகன பணிமனையில் விபத்துக்குள்ளான கார்கள், பழுதடைந்த லாரிகள், கடன் தொகை செலுத்தாமல் லாரி , கார்கள் , வாகனங்களை மூடி வைக்க பயன்படுத்தப்படும் தார்ப்பாய்கள் போன்றவற்றில் கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.  மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தால் தனியார் பேருந்து மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கம், தனியார் ஹோட்டல் உரிமையாளர் சங்கம், வர்த்தக சபை ,  சிறு வியாபாரிகள் சங்கம், திருமண மண்டப உரிமையாளர்கள் சங்கம், திரையரங்கு உரிமையாளர் சங்கம் , தனியார் வணிக வளாக உரிமையாளர்கள் சங்கம் மற்றும் லாரி பழுது நீக்கும் இடங்கள், தனியார் நூர்பாலைகள் சங்கம், தனியார் ஜவ்வரசி ஆலைகள் உரிமையாளர் சங்கம் ஆகியவற்றோடு பல முறை கூட்டங்கள் நடத்தி, டெங்கு தடுப்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ள, அனைவருக்கம் அறிவுறுத்தப்பட்டு போதிய கால அவகாசம் வழங்கப்பட்டது. 
ஆனால் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலுக்கு பிறகும், பல நிறுவனங்கள் டெங்கு தடுப்பு பணிகளை முழுமையாக மேற்கொள்ளாமல், தங்களது பொறுப்புகளை தட்டிகழித்ததன் அடிப்படையில் 25.10.2017 அன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்ட எல்.ஆர்.என். தனியார் பேருந்து / லாரி  நிறுவனத்துக்கு ரூ. 15 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. ஆய்வின் போது குறிப்பிடப்பட்ட அனைத்து குறைபாடுகளையும் சம்மந்தப்பட்ட நிறுவனத்தினர் 24 மணி நேரத்திற்குள் சரி செய்ய வேண்டும். அதன் பின்னர் மாநகராட்சி அலுவலர்களால் இப்பணிமனை ஆய்வு செய்யப்பட்டு, டெங்கு தடுப்பு பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாமலிருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இந்நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ. 15 இலட்சத்தை மாநகராட்சி நிர்வாகம் தெரிவிக்கும் நாட்களுக்குள், செலுத்திட வேண்டும்.  தவறும்பட்சத்தில் வருவாய் வசூல்  சட்டத்தின் கீழ் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். 
அதனைத் தொடர்ந்து சூரமங்கலம் மண்டலம் கோட்டம் எண் 3 ல் உள்ள ஸ்ரீ சைதன்யா என்ற தனியார் பள்ளியில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இடத்தில் கொசுப்புழுக்கள் இருப்பதை, கண்டறிந்த மாவட்ட ஆட்சியர் ரூ. 2 இலட்சம் அபராதத் தொகை விதித்தார்.  பள்ளி வளாகங்களை நிர்வாகத்தினர் தூய்மையாக பராமரித்தால் மட்டுமே,  மாணவ, மாணவியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். எனவே பள்ளி நிர்வாகத்தினர் மாணவ, மாணவியர்களுக்கு டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு தொடர்பான விவரங்களை தினசரி  தெரிவிப்பதோடு மட்டுமல்லாமல், பள்ளி வளாகங்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். பின்னர் பொன்னுவேல் நகர்  2 வது தெரு நரசோதிப்பட்டியில் வீடுகளில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் டெங்கு தடுப்பு பணிகளை முழுமையாக மேற்கொள்ளப்படுகிறதா, என்பதை பொதுமக்களிடம் கேட்டறிந்தார். 
இவ்வாய்வின் போது செயற்பொறியாளர் திரு.அ.அசோகன், திரு. ஆர். ரவி, மாநகர நல அலவலர் மரு.வி. பிரபாகரன், உதவி ஆணையாளர் திரு.ப.ரமேஷ்பாபு, சுகாதார அலுவலர் திரு.எஸ். மணிகண்டன், சுகாதார ஆய்வாளர்கள் திரு. கே. சங்கர், திரு. எ. கோபிநாத் உள்பட பலர் இருந்தனர்.