செய்தி வெளியீடு எண் :129,நாள் : 24.10.2017 நெசவாளர் பெருமக்கள் தங்களது வீடுகளில் ஜரிகை போன்ற பொருட்களை ஊறவைக்கும் பாத்திரங்களை தினந்தோறும் சுத்தப்படுத்தி பயன்படுத்திட வேண்டும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ரோஹிணி ரா. பாஜிபாகரே இ.ஆ.ப., அவர்கள் வேண்டுகோள்.

செய்தி வெளியீடு எண் :129,நாள் : 24.10.2017 நெசவாளர் பெருமக்கள் தங்களது வீடுகளில் ஜரிகை போன்ற பொருட்களை ஊறவைக்கும் பாத்திரங்களை தினந்தோறும் சுத்தப்படுத்தி பயன்படுத்திட வேண்டும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ரோஹிணி ரா. பாஜிபாகரே இ.ஆ.ப., அவர்கள் வேண்டுகோள்.

சேலம் மாநகராட்சி அம்மாபேட்டை மண்டலத்திற்குட்பட்ட கோட்டம் எண் 11 பொன்னம்மாபேட்டை தில்லை நகர் 2 வது கிராஸ், பெண்டம் ராமசாமி தெரு, மாரியம்மன் கோவில் தெரு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும்   டெங்கு தடுப்பு பணிகளை  மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ரோஹிணி ரா. பாஜிபாகரே இ.ஆ.ப., அவர்கள் 24.10.2017 அன்று  ஆய்வு மேற்கொண்டார். 
 
இவ்வாய்வின்போது வீடுகளுக்குள் சென்ற மாவட்ட ஆட்சித்தலைவர் சமையலறை, குளியறை மற்றும் பிற தேவைகளுக்காக தண்ணீர் சேகரித்து வைக்கும்  பாத்திரங்களில் கொசுப்புழுக்கள் உள்ளதா என்பதை ஆய்வு செய்தார். அப்பகுதியில் அதிகளவில் நெசவாளர்கள் வசித்து வருவது கண்டறியப்பட்டதன் அடிப்படையில், வீடுகளுக்குள் வைத்து  நெசவு தொழில் மேற்கொள்ளப்பட்டு வருவதை ஆய்வு செய்த போது, நெசவாளர்கள் ஜரிகை போன்ற பொருட்களை பாத்திரங்களில் ஊற வைத்து பயன்படுத்தி வருவதாக தெரிவித்தனர்.   இதனை கேட்டறிந்த மாவட்ட ஆட்சித்தலைவர்,  நெசவாளர் பெருமக்கள் நெசவு தொழிலுக்கு பயன்படுத்தும் ஜரிகை பொருட்களை ஊற வைக்கும் பாத்திரங்களை தினந்தோறும் சுத்தப்படுத்த வேண்டும் எனவும், நெசவாளர் பெருமக்கள் நெசவு தொழிலையும் வீட்டிற்குள்ளேயே மேற்கொண்டு வருவதால் அதிக முக்கியத்துவம் அளித்து, சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார். 
 
மேலும் வீட்டில் உள்ள பெண்கள் குளிர் சாதப் பெட்டிகளை 2 நாட்களுக்கு 1 முறை சுத்தப்படுத்தி பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல், சமையலுக்கு பயன்படுத்தும் பாத்திரங்கள் , குடிநீரை சேகரிக்க பயன்படுத்தும் டிரம்கள் உள்ளிட்டவைகளை தினந்தோறும் சுத்தப்படுத்தி பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.  மாநகராட்சி சுகாதாரத்துறையினர் குளிர் சாதனப்பெட்டி, சமையல் பாத்திரங்கள் உள்ளிட்டவைகளை தினந்தோறும் சுத்தப்படுத்துவதற்கு நினைவூட்டும் வகையில், டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த ஒட்டுவில்லைகளை வீட்டிற்குள் ஒட்டிட வேண்டும். இதனை பொதுமக்கள் பார்க்கும் போது எல்லாம் அவர்களது வீடுகளை சுத்தமாக பராமரிப்பதற்கு நினைவூட்டும் வகையில் அமைந்திடும். டெங்கு தடுப்பு பணிகளை மேற்கொள்ள வரும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை டெங்கு தடுப்பு பணிகளை மேற்கொள்ளவிடாமல்  தடுத்திடும் பொதுமக்கள் குறித்த விவரங்கள் மாநகர நல அலுவலர் மூலம் காவல் துறைக்கு தெரிவிக்கப்படும்.  அதனைத் தொடர்ந்து சம்மந்தப்பட்ட நபர்களிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு, டெங்கு தடுப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.  எனவே பொதுமக்கள் அனைவரும் டெங்கு தடுப்பு பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, சுகாதார மேம்பாட்டு பணிகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருக்க  வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்  கேட்டுக் கொண்டார். 
இவ்வாய்வின் போது செயற்பொறியாளர் திரு.ஜி. காமராஜ், உதவி ஆணையாளர் திரு.ஏ.ஆர். ஏ. ஜெயராஜ், மாநகர நல அலுவலர் மரு.வி. பிரபாகரன், உதவி செயற்பொறியாளர் திரு.எம்.ஆர். சிபிசக்கரவர்த்தி, சுகாதார அலுவலர் திரு.வி. மாணிக்க வாசகம்  மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.