செய்தி வெளியீடு எண் :125,நாள் : 22.10.2017 டெங்கு தடுப்பு பணிகளை மேற்கொள்ளாமல் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் நிலையினை உருவாக்கிய தனியார் மருத்துவமனைகள் , தனியார் நூர்பாலைகள் மற்றும் தேநீர் விடுதிகளுக்கு ரூ. 24.25 இலட்சம் அபராதம் விதிப்பு தனி அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ.சதீஷ் அவர்கள் நடவடிக்கை

செய்தி வெளியீடு எண் :125,நாள் : 22.10.2017 டெங்கு தடுப்பு பணிகளை மேற்கொள்ளாமல் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் நிலையினை உருவாக்கிய தனியார் மருத்துவமனைகள் , தனியார் நூர்பாலைகள் மற்றும் தேநீர் விடுதிகளுக்கு ரூ. 24.25 இலட்சம் அபராதம் விதிப்பு தனி அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ.சதீஷ் அவர்கள் நடவடிக்கை

சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலம் கோட்டம் எண் 13 ல் உள்ள சண்முகா மருத்துவமனையில் மாநகராட்சி ஆணையாளர் திரு. ரெ. சதீஷ் அவர்கள் 22.10.2017 அன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். இவ்வாய்வின் போது மருத்துவமனை வளாகத்தில் உள்ள குடிநீர் தேக்கி வைக்கக்கூடிய  தண்ணீர் தொட்டிகள், உடைந்த மருத்தவ பொருட்கள் மற்றும் பயன்படாத பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றில், கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.  மேலும் தண்ணீர் தொட்டிகளில் விஷத்தன்மை உடைய பாம்பு இருப்பதும், ஆணையாளரின் ஆய்வில் கண்டறியப்பட்டது.  மருத்துவமனையிலிருந்து பெறப்பட்ட அபாயகரமான மருத்துவ கழிவுகள், முறையாக அப்புறப்படுத்தாமல் மருத்துவமனை வளாகங்களிலும், அருகில் உள்ள ஓடையிலும் கொட்டப்பட்டிருந்தது.  இதனைத்  தொடர்ந்து ரூ 10 இலட்சம் அபராதத் தொகையினை இம்மருத்துவமனைக்கு விதித்து உத்தரவிட்டார். 
மேலும் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் உத்தரவின் பேரில்  செயற்பொறியாளர் திரு.அ.அசோகன் தலைமையிலான குழுவினர் 22.10.2017 அன்று மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலம் கோட்டம் எண் 15 ல் உள்ள சரஸ்வதி மருத்துவமனை வளாகத்தை  ஆய்வு செய்தனர்.  இம் மருத்துவமனை வளாகம் தூய்மையாக பராமரிக்கப்படாமலும், பிளாஸ்டிக் வாலிகள் , தண்ணீர் தொட்டிகள் மற்றும்  அகற்றப்படாமலிருந்த தேங்காய் சிரட்டைகள், பயன்படாத டயர்கள் போன்றவற்றில் கொசுப்புழுக்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து தூய்மையாக மருத்துவமனை வளாகத்தை பராமரிக்காததாலும் ,  கொசுப்புழுக்கள் உற்பத்தியாவை தடுக்காததை தொடர்ந்து ரூ. 4 இலட்சம் அபராதத் தொகை விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இராமகிருஷ்ணா சாலையில் உள்ள தேநீர் விடுதியில் இருந்த குடிநீர் சேகரிப்பு தொட்டியில், கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டு ரூ. 25 ஆயிரம் ரூபாய் அபராதத் தொகையாக விதிக்கப்பட்டது. 
மேலும் அம்மாபேட்டை மண்டலத்தில் உதவி ஆணையாளர் திரு.ஏ.ஆர்.ஏ.  ஜெயராஜ் அவர்கள் தலைமையிலான குழுவினர் அம்மாபேட்டை மண்டலம் கோட்டம் எண் 37 ல் காமராஜர் காலனியில் உள்ள சம்மந்தம் நூர்பாலை மற்றம் கோட்டம் எண் 37 ல்  தாதம்பட்டி பகுதியில் உள்ள தங்கவேல் நூர்பாலை வளாகங்களில் டிரம்கள், எண்ணெய் கேன்கள் மற்றும் தளவாடப்  பொருட்களில் கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டு தலா ரூ. 5 இலட்சம் வீதம் 2 நூர்பாலைகளுக்கும் ரூ. 10 இலட்சம் அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டது.  இதன் மூலம் 22 .10.2017 அன்று ஒரு நாள் மட்டும் 2 மருத்துவமனைகள், 2 நூர்பாலைகள், 1 தேநீர் விடுதியிலிருந்து  ரூ 24 இலட்சத்து 25 ஆயிரம் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சி பகுதிகளில் டெங்கு தடுப்பு பணிகள் அனைத்து பணியாளர்களையும் ஒருங்கிணைத்து , செயல்படுத்தப்பட்டு வருகிறது. சேலம் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும் சுகாதார மேம்பாட்டு பணிகளுக்கு, அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கி, தங்களது வீடுகள் மற்றும் நிறுவன வளாக பகுதிகளை தூய்மையா பராமரித்திட வேண்டும் என ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.