செய்தி வெளியீடு எண் :117, நாள் : 20.10.2017 சேலம் மாநகராட்சி பகுதிகளில் டெங் கு தடுப்பு பணிகளை மேற்கொள்ள வரும் அலுவலர்கள் / பணியாளர்களை வீடுகளுக்குள் அனுமதிக்காதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ரோஹிணி ரா. பாஜிபாகரே இ.ஆ.ப., அவர்கள் தகவல்

செய்தி வெளியீடு எண் :117, நாள் : 20.10.2017 சேலம் மாநகராட்சி பகுதிகளில் டெங் கு தடுப்பு பணிகளை மேற்கொள்ள வரும் அலுவலர்கள் / பணியாளர்களை வீடுகளுக்குள் அனுமதிக்காதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ரோஹிணி ரா. பாஜிபாகரே இ.ஆ.ப., அவர்கள் தகவல்

சேலம் மாநகராட்சி  கொண்டலாம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட கோட்டம் எண் 60 ல் உள்ள பங்களா நகர், பராசக்தி நகர் மற்றும்  மாநகர் ரோடு ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு தடுப்பு பணிகளை 20.10.2017 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ரோஹிணி ரா. பாஜிபாகரே அவர்கள் ஆய்வு செய்தார்.  
 
சேலம் மாநகராட்சி நிர்வாகம் டெங்கு தடுப்பு பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில் தினந்தோறும் நள்ளிரவு 12.00 மணி வரை  திடக்கழிவுகளை அகற்றி, அப்பகுதிகளை தூய்மையாக பராமரிப்பதோடு மட்டுமல்லாமல், காலையில் தொடர்ந்து  தீவிர துப்புரவு பணிகள், மருந்து தெளிப்பு பணிகள், கொசுப்புழுக்களை கண்டறிந்து அகற்றுதல் மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை மாநகராட்சி அலுவலர்கள் / பணியாளர்கள் ஒருங்கிணைந்து செயல்படுத்தி வருகிறார்கள்.  பொதுமக்கள் தங்களது வீடுகளை முதலில் சுத்தமாக வைத்துக் கொள்ளுவதோடு மட்டுமல்லாமல், வீடுகளுக்குள் தண்ணீர் சேகரித்து வைக்கும் பாத்திரங்கள், பிளாஸ்டிக் டிரம்கள் போன்றவற்றில்  கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் நிலையினை உருவாக்கக்கூடாது. 
மாநகராட்சி பகுதிகளில்  உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு டெங்கு தடுப்பு பணிகளை மேற்கொள்ள வரும் அலுவலர்கள் / பணியாளர்களை வீடுகளுக்குள் அனுமதித்து, அவர்களது பணிகளை மேற்கொள்ள ஒத்துழைக்க வேண்டும் , மாறாக வீட்டுக்குள் அனுமதிக்காமல் டெங்கு தடுப்பு பணிகளை தடுக்கும் விதத்தில் செயல்படுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.  குடிநீரில் கொசுப்புழுக்களை உற்பத்தியாகும் நிலையினை உருவாக்குபவர்கள் மட்டுமல்லாது, அருகில் உள்ளவர்களும் இந்நோயினால் பாதிக்கபடுவார்கள். எனவே பொது மக்கள் மாநகராட்சி பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். மேலும் காலிமனைகளின் உரிமையாளர்கள் தங்களது இடத்தில் உள்ள குப்பைகளை அகற்றுவதோடு மட்டுமல்லாமல், தேங்கியுள்ள மழை நீரினை அகற்றுவதற்கும் நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும். மாநகராட்சி அலுவலர்களின் ஆய்வின்  போது, காலிமனைகள் சுத்தப்படுத்தப்படாமல் இருந்தால், அவற்றை மாநகராட்சி நிர்வாகத்தினர் தூய்மை படுத்தி , அதற்கான செலவினத் தொகை  மற்றும் அபராதத் தொகை உரிமையாளர்களிடம் வசூலிக்கப்படும்.    புதிய கட்டுமான பணிகளை மேற்கொள்ளுவோர் கலவை இயந்திரங்கள், கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தும் தண்ணீர் சேகரிக்கும் தொட்டிகள் ஆகியவற்றை முறையாக பராமரிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக் கொண்டார். 
 
இவ்வாய்வின் போது உதவி ஆணையாளர் திரு. மு. கணேசன், மாநகர நல அலுவலர் மரு. வி. பிரபாகரன், மருத்துவ அலுவலர் மரு. சித்ரா பவானி, உதவி செயற்பொறியாளர் திரு.எம். செந்தில், சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.