செய்தி வெளியீடு எண் :114,நாள் : 17.10.2017 சேலம் மாநகராட்சி அம்மாபேட்டை மண்டலத்திற்குட்பட்ட கோட்டம் எண் 40 ல் ராஜவாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ரோஹிணி ரா. பாஜிபாகரே இ.ஆ.ப., அவர்கள் உத்தரவு

செய்தி வெளியீடு எண் :114,நாள் : 17.10.2017 சேலம் மாநகராட்சி அம்மாபேட்டை மண்டலத்திற்குட்பட்ட கோட்டம் எண் 40 ல் ராஜவாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ரோஹிணி ரா. பாஜிபாகரே இ.ஆ.ப., அவர்கள் உத்தரவு

சேலம் மாநகராட்சி அம்மாபேட்டை மண்டலத்திற்குட்பட்ட கோட்டம் எண் 40 ல் ராஜவாய்க்காலில்  உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் உடனடியாக அகற்றிட, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ரோஹிணி ரா. பாஜிபாகரே இ.ஆ.ப., அவர்கள் 17.10.2017 அன்று உத்தரவிட்டார். 
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தொடர் மழை காரணமாக அம்மாபேட்டை மண்டலம் 40 வது கோட்டத்தில்  நீர் தேங்கியுள்ள பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார். குமரகிரி ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீர் ராஜவாய்க்கால் வழியாக திருமணிமுத்தாறை சென்றடையும், இந்நிலையில் அசோக் நகர் பகுதியில் ராஜவாய்க்காலில் நீர்வரத்து பாதைகளை அடைத்து, வீடுகள் மற்றும் கடைகள் கட்டப்பட்டிருப்பது இவ்வாய்வில் கண்டறியப்பட்டது. ராஜவாய்க்காலில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் 24 மணி நேரத்திற்குள் அகற்றிட, சம்மந்தப்பட்ட வருவாய் மற்றும் மாநகராட்சி அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டார்.  பொதுமக்கள் நீர் வரத்து பாதைகளை தடுத்து, கட்டிடங்களை கட்டுவதோ அல்லது வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதோ கூடாது எனவும், மீறுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கூறினார். 
பின்னர் கோட்டம் எண் 37 ல் சங்கிலி ஆசாரி காடு, நீலாம்பாள் காடு,  பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர், அங்கு வீடுகளில் பொதுமக்கள் சேமித்து வைத்திருந்த குடிநீர் பாத்திரங்களை ஆய்வு செய்தார்.  பொதுமக்கள் தேவைக்கும் மீறி 3 நாட்களுக்கு மேல்  குடிநீரை சேமித்து வைத்து , கொசுப்புழுக்கள் உருவாகும் நிலையினை உருவாக்கக் கூடாது எனவும், வீடு மற்றும் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். சாக்கடை கால்வாய்களில் பாலித்தின் பைகள் மற்றும் திடக்கழிவுகள் போன்றவற்றை கொட்டக் கூடாது எனவும், குப்பைத் தொட்டிகளில் மட்டுமே கொட்ட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.  மேலும் குடிநீரினை பாதுகாப்பாக மூடி  வைக்காமல், உரிய கால இடைவெளியில் பாத்திரங்களை சுத்தப்படுத்தி, பயன்படுத்தாமல்   கொசுப்புழுக்கள் உற்பத்தியாகக்கூடிய வகையில் இருக்கும்  வீடுகள் , வணிக நிறுவனங்கள் , உணவகங்கள், தேநீர் விடுதிகள், பேக்கரிகள் , வாகனங்கள் பழுது நீக்கம் இடங்கள், பஞ்சர் கடைகள் வைத்திருப்போர் என நோய் தடுப்பு பணிகளுக்கு குந்தகம் விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அபராத தொகையும் உடனடியாக வசூலிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.  பின்னர் கோட்டம் எண் 41 ல் அண்ணா தெருவில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளை ஆய்வு செய்தார். 
 
இவ்வாய்வின் போது மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ரா. சுகுமார், வருவாய்    கோட்டாட்சியர்   பி. குமரேஷ்வரன்,
செயற்பொறியாளர் திரு.ஜி. காமராஜ், உதவி செயற்பொறியாளர் திரு.எம்.ஆர். சிபிசக்கரவர்த்தி, வருவாய் வட்டாட்சியர் திரு.பி.எஸ். லெனின், உதவி பொறியாளர் திரு.எம். செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.