செய்தி வெளியீடு எண் :108,நாள் : 12.10.2017 டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளில் மாணவர்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாமினை துவக்கி வைத்த ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் தகவல்

செய்தி வெளியீடு எண் :108,நாள் : 12.10.2017 டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளில் மாணவர்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாமினை துவக்கி வைத்த ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் தகவல்

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து கல்லூரி மாணவ, மாணவியர்களை டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளில், முழுமையாக பயன்படுத்திக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும் என 12.10.2017 அன்று கோட்டம் எண் 51  ல் உள்ள ஜாரி கொண்டலாம்பட்டி அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாமினை துவக்கி வைத்த ஆணையாளர் தெரிவித்தார். இம்முகாமிற்கு சேலம் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.பி. சக்திவேல் அவர்கள் தலைமை வகித்தார். 
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர தொற்று நோய் பணிகள், அனைத்து பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  குறிப்பாக மாநகராட்சி  பகுதிகளில் உள்ள பள்ளிகளில் உள்ள மாணவ, மாணவியர்களின் நலன்களை கருத்தில் கொண்டு, சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்துவதற்கு, அனைத்து ஏற்பாடுகளையும் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.  அதனடிப்படையில் கோட்டம் எண் 51  ல் உள்ள ஜாரி கொண்டலாம்பட்டி அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.  பொது மக்களுக்கு பருவ நிலை மாற்றத்தினால் உடல் நலக்குறைவு ஏற்பட்டால் , உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தையோ அல்லது அரசு மருத்துவமனையையோ அணுகி உரிய சிகிச்சை பெற வேண்டும். மாறாக சுய மருத்துவம் செய்து கொள்ளக் கூடாது.  இக்கருத்தினை மாணவர்கள் தங்களது பெற்றோர்கள், உற்றார் உறவினர்கள், அருகில் குடியிருப்பவர்கள், நண்பர்களிடம் தெரிவித்திட வேண்டும்.  
சேலம் மாநகராட்சி பகுதிகளில் தினந்தோறும் தீவிர துப்புரவு பணிகள்,  இரவு நேரங்களில் குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் மூலம் அகற்றுதல், சாக்கடைகளை தூர்வாருதல் , நீர்வழிப்பாதைகளில் உள்ள தடைகளை அகற்றுதல், நிலவேம்பு குடிநீர் வழங்குதல், கைத்தெளிப்பான்கள் மற்றும் வாகனத் தெளிப்பான்கள் மூலம் மருந்துகள் தெளித்தல் போன்ற பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தங்களது வீடுகளை சுத்தமாக வைத்துக் கொண்டால், தொற்று நோய் பரவாமல் தடுத்திட முடியும்  எனவே பொது சுகாதாரம் கருதி, மாநகராட்சி நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிடுமாறு ஆணையாளர் கூறினார். 
முன்னதாக 300 மாணவர்கள் ஆணையாளர் தலைமையில் டெங்கு தடுப்பு உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர்.  அதனைத் தொடர்ந்து 112 மாணவர்களுக்கு விலையில்லா மடிக் கணிணிகள் வழங்கப்பட்டது.  மேலும் ரூ. 2 இலட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டில் சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டிலிருந்து, அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு பாதுகாப்பு  குடிநீர் வழங்கும் பொருட்டு, குடிநீர் சுத்திகரிப்பு கருவி பயன்பாட்டிற்காக துவக்கி வைக்கப்பட்டது.  மாணவர்களுக்கு நவீன வகையில் பயிற்றுவிக்கும் வகையில்  ஸ்மார்ட் டி.வி. சேவை துவக்கி வைக்கப்பட்டது.  அதனைத் தொடர்ந்து டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த பள்ளி மாணவ, மாணவியர்களின் விழிப்புணர்வு பேரணி ஆணையாளரால் துவக்கி வைக்கப்பட்டு, பொது மக்களுக்கு டெங்கு தடுப்பு குறித்த ஒட்டு வில்லைகள், துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. 
இந்நிகழ்ச்சியில் மாநகர நல அலுவலர் மரு. வி. பிரபாகரன், விநாயகா மிஷின் ஹோமியோபதி கல்லூரி முதல்வர் மரு.நாகராஜன், பள்ளி தலைமை ஆசிரியர் திரு. பி பெருமாள் , பெற்றோர்  ஆசிரியர் சங்கத்தலைவர் திரு.ஏ.தேவராஜ் உள்பட பலர்  கலந்து கொண்டனர்.