செய்தி வெளியீடு எண் :106 , நாள் : 10.10.2017 மக்களின் வாழ்வியல் நடைமுறைகளை மாற்றுவதற்கான பணிகளை தூய்மை இந்தியா திட்ட களப்பணியாளர்கள் மேற்கொள்ள வேண்டும் தனி அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையார் திரு.ரெ.சதீஷ் அவர்கள் வேண்டுகோள்

செய்தி வெளியீடு எண் :106 , நாள் : 10.10.2017 மக்களின் வாழ்வியல் நடைமுறைகளை மாற்றுவதற்கான பணிகளை தூய்மை இந்தியா திட்ட களப்பணியாளர்கள் மேற்கொள்ள வேண்டும் தனி அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையார் திரு.ரெ.சதீஷ் அவர்கள் வேண்டுகோள்

பொது மக்களின் அன்றாட வாழ்வியல் நடைமுறைகளில் மாற்றம் கொண்டு வருவதற்கான, உன்னதமான பணியினை தூய்மை இந்தியா திட்ட களப்பணியாளர்கள் அனைவரும் மேற்கொள்ள வேண்டும் என, 10.10.2017 அன்று ரெட்டிபட்டியில் உள்ள தனியார் ஹோட்டலில்  நடைபெற்ற  தூய்மை இந்தியா திட்டத்தின்  விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ளவுள்ள பரப்புரையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான பயிலரங்கத்தை துவக்கி வைத்த ஆணையாளர் வேண்டுகோள் விடுத்தார். 

சேலம் மாநகராட்சி,  சேலம் மண்டலத்திற்குட்பட்ட அனைத்து நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் தூய்மை இந்தியா திட்டத்தின்  விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ளுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள பரப்புரையாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களுக்கான பயிலரங்கம் நகராட்சி நிர்வாகத் துறையின் சார்பில், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இப்பயிலரங்கை துவக்கை வைத்து ஆணையாளர் பேசியதாவது.

தூய்மை இந்தியா திட்டத்தின்  கீழ் விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ளவுள்ள களப்பணியாளர்கள் அனைவரும் திட்டத்தின் நோக்கம் குறித்த தெளிவான அணுகுமுறையோடு , பொதுமக்களை சென்றடைய வேண்டும். முக்கியமாக பொதுமக்கள் வாழ்வியல் நடைமுறைகளில் மாற்றம் கொண்டு வருவதற்கான , நடவடிக்கையினை இத்திட்டத்தின் மூலம் பணியாளர்கள் மேற்கொள்ள வேண்டும்.  இத்திட்டம் குறித்த விழிப்புணர்வினை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இத்திட்டத்தில் பொதுமக்களையும் பங்குகொள்ள வைப்பது தான் மிகச்சிறந்த நடவடிக்கையாகும். பொதுமக்களிடையே சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, தனி நபர் கழிப்பிடங்கள் இல்லாதவர்களை , தனி நபர் கழிப்பிடங்கள் கட்ட வைப்பது, பொது கழிவறைகள் மற்றும் சமுதாய கழிப்பறைகள் தேவைக்கேற்ப கட்டுவதற்கு உதவி செய்வது, முறையான வகையில் திடக்கழிவு மேலாண்மை செயலாக்கத்தை பொதுமக்களுக்கு தெரிவிப்பது, உள்ளிட்ட பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, களப்பணியாளர்கள் பணியாற்றிட வேண்டும். மாநகராட்சி பகுதிகளுக்கு 2 கோட்டங்களுக்கு 1 பரப்புரையாளர் , நகராட்சி பகுதிகளுக்கு 4 கோட்டங்களுக்கு 1 பரப்புரையாளர்,பேரூராட்சி பகுதிகளுக்கு 6 கோட்டங்களுக்கு 1 பரப்புரையாளர் என்ற விகிதத்தில் களப்பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.  தினசரி பொதுமக்களை சந்திப்பதோடு மட்டுமல்லாமல், பொதுமக்களின் தேவைகளை உடனடியகாக சம்மந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்திற்கு கொண்டு செல்லும் பணிகளையும் களப்பணியாளர்கள் மேற்கொள்ள வேண்டும். பரப்புரையாளர்கள் , மேற்பார்வையாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளில் முழுமனதோடு பணியாற்ற வேண்டும் என ஆணையாளர் கேட்டுக் கொண்டார். 

இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகங்களின் மண்டல இயக்குநர் திருமதி கே.என். லஷ்மி ,  நகராட்சி  நிர்வாக  ஆணையர் அலுவலக கண்காணிப்பு பொறியாளர் திரு.டி. அன்பழகன்  , பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் திரு. கண்ணன், மண்டல செயற்பொறியாளர் திரு.எஸ்.  திருமாவளவன், சேலம் மண்டலத்திற்குட்பட்ட நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.