செய்தி வெளியீடு எண் :100,நாள் : 04.10.2017 சேலம் மாநகராட்சி பகுதிகளில் காலாண்டு விடுமுறை நாட்கள் முடிந்து பள்ளிகள் திறந்துள்ளதால் சுகாதாரத் துறையின் மூலம் பள்ளி வளாகங்களில் தீவிர துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது தனி அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் தகவல்

செய்தி வெளியீடு எண் :100,நாள் : 04.10.2017 சேலம் மாநகராட்சி பகுதிகளில் காலாண்டு விடுமுறை நாட்கள் முடிந்து பள்ளிகள் திறந்துள்ளதால் சுகாதாரத் துறையின் மூலம் பள்ளி வளாகங்களில் தீவிர துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது தனி அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் தகவல்

சேலம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள  அனைத்து கோட்டங்களிலும் தீவிர துப்புரவு பணிகள், மருந்து தெளிப்பு பணிகள்   மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு  வருகிறது. காலாண்டு விடுமுறை முடிந்து  பள்ளிகள்  திறந்த நிலையில் அனைத்து பள்ளி, கல்லூரி வளாகங்களை தூய்மைப்படுத்திட ஏதுவாக,  மாநகராட்சி நிர்வாகம்  சார்பில் 60 கோட்டங்களுக்கும் தனி குழுக்கள் அமைக்கப்பட்டு, அந்ததந்த பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் தீவிர துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  
 
பள்ளி வளாகங்களில் தீவிர துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்படுவதோடு மட்டுமல்லாமல்  வகுப்பறைகளில் கைத்தெளிப்பான்கள் மற்றும் வாகனத் தெளிப்பான்கள் மூலம்  மருந்து தெளிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.    தீவிர துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்ட  பள்ளி, கல்லூரி வளாகங்களை தொடர்ந்து  தூய்மையாக பராமரிப்பதற்கு தேவையான அறிவுரைகள் பள்ளி , கல்லூரி நிர்வாகத்தினருக்கு மாநகராட்சி நிர்வாகத்தால்  தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு நில வேம்பு குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் எடுத்துள்ளது. 
 
பொது மக்கள் அதிகமாக  கூடும் இடங்களான அங்கன்வாடி மையங்கள் , உழவர் சந்தைகள், புதிய மற்றும் பழைய பேருந்து  நிலையங்கள் , மார்க்கெட்டுகள், நியாய விலைக்கடைகள், அம்மா உணவகங்கள் போன்ற இடங்களில் தினந்தோறும்    நிலவேம்பு குடிநீர் வழங்குவதற்கு  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.      மேலும் வாகனங்கள் மூலமாகவும் 60 கோட்டங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதிகளில் உள்ள 16 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் தினந்தோறம் சிறப்பு மருத்துவ முகாம் நடத்துவதற்கு மாநகராட்சி சுகாதாரத் துறையினர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  பொதுமக்கள் உடல் நலக்குறைவு ஏற்பட்டால் சுய மருத்துவம் மேற்கொள்ளாமல், அருகில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தையோ அல்லது  தங்களது பகுதிகளில் நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாமிற்கு சென்று, சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  
மாநகராட்சி பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகள், தேநீர் விடுதிகள்,  வணிக வளாகங்கள், திரை அரங்குகள்,உணவகங்கள், இரண்டு மற்றும் நான்கு சக்கரம் வாகனம் , பேருந்து மற்றும் லாரி பழுது நீக்கும் நிலையங்கள் ஆகியவற்றில்  மழை நீர் தேங்காமல் நடவடிக்கை எடுப்பதோடு,  பயன்படாத இரும்பு பொருட்கள் , எரிபொருள் கேன்கள், உடைந்த உதிரி பாகங்கள், பழைய டயர்கள் ஆகியவற்றை உடனடியாக அப்புறப்படுத்துவதற்கு அந்த நிறுவனத்தாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீடுகளில் கொசுப்புழுக்களை கண்டறிபவர்கள் குடியிருப்பு பகுதிகளில் தினந்தோறும் ஆய்வு செய்து,   தண்ணீர் சேகரித்து வைத்திருக்கக் கூடிய பாத்திரங்கள், டிரம்கள்,  மேல் நிலை நீர்த்தேக்க தொட்டிகள், கீழ் நிலை நீர்த்தேக்க தொட்டிகளை ஆய்வு செய்து,  அபேட் மருந்துகளை  தெளித்து வருகிறார்கள். பொதுமக்களிடையே டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் , துண்டு பிரசுரங்கள், ஒட்டு வில்லைகள் வழங்கப்பட்டு வருகின்றது. 
 இந்நிலையில் மாநகராட்சி சுகாதாரத் துறையினர் தீடீர் ஆய்வு மேற்கொள்ளும் போது கொசுப்புழு இருப்பது கண்டறியப்பட்டால்,  சம்மந்தப்பட்டவர்கள் மீது  உரிய விதிகளின் படி  நடவடிக்கை எடுக்கப்படும். எனவே பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகள், தொழில் முனைவோர்கள் தங்களது நிறுவனங்களை சுகதாரமாக பராமரித்து, மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும் படி  கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேற்கண்ட தகவலை மாநகராட்சி ஆணையாளர்  தெரிவித்துள்ளார்.