சேலம் மாநகராட்சி பகுதிகளில் நில வேம்பு குடிநீர் வழங்க நடவடிக்கை

சேலம் மாநகராட்சி பகுதிகளில் நில வேம்பு குடிநீர் வழங்க நடவடிக்கை

சேலம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள 213 பள்ளிகளில் பயிலும்
2 இலட்சத்து 20 ஆயிரம் மாணவ, மாணவியர்களுக்கு
 நில வேம்பு குடிநீர் வழங்க நடவடிக்கை
 தனி அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ்  அவர்கள் தகவல்

    சேலம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள 213 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 2 இலட்சத்து 20 ஆயிரம் மாணவ, மாணவியர்களுக்கு  நில வேம்பு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என தனி அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ்  அவர்கள் தெரிவித்தார்.
    தமிழ்நாடு அரசின் உத்தரவின் பேரில் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  பள்ளி மாணவ , மாணவியர்களிடையே டெங்கு தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் டெங்கு தடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள், ஒட்டு வில்லைகள் ஏற்கனவே வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பள்ளி மாணவ, மாணயவியர்களைக் கொண்டு டெங்கு தடுப்பு குறித்த உறுதிமொழி மாநகர பகுதிகளில் உள்ள பள்ளிகளில் தினந்தோறும் எடுக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் கோட்டை மகளிர் மேல் நிலைப்பள்ளியில் தனி அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ்  அவர்கள் தலைமையில் 22.7.2017 அன்று டெங்கு தடுப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
பின்னர் ஆணையாளர் தெரிவித்ததாவது :-
 பள்ளி வளாகங்களையும் , வசிக்கும் பகுதிகளையும் தூய்மையாக வைத்துக் கொள்வது தொடர்பான விவரங்கள் மாணவ, மாணவியர்களிடையே தெரிவிக்கப்பட்டது. சேலம் மாநகர பகுதிகளில்  செயல்படும் 213 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 2 இலட்சத்து 20 ஆயிரம் மாணவ, மாணவியர்களுக்கு நில வேம்பு குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கை மாநகராட்சி நிர்வாகத்தால் எடுக்கப்பட்டுள்ளது.  மாநகர பகுதிகளில் உள்ள பள்ளி வளாகங்களை தூய்மையாக பராமரிக்கும் பள்ளி நிர்வாகத்தினரை பாராட்டி சான்றிதழ்கள் மற்றும் சுழற்கோப்கைள் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.  மாநகர பகுதிகளில் உள்ள பள்ளிகளை பராமரிக்கும் நிலையினை ஆய்வு செய்வதற்காக, அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், தன்னார்வ தொண்டு உறுப்பினர்கள், மருத்துவர்கள் ஆகியோரைக் கொண்ட குழு ஒன்று விரைவில் அமைக்கப்படவுள்ளது.  இக்குழுவினர் அனைத்து பள்ளிகளுக்கும் சென்று, ஆய்வு செய்து பள்ளி வளாகம் தூய்மையாகவும், பாதுகாப்பாகவும் பராமரிக்கப்படுகிறதா என்பதன் அறிக்கையினை சமர்ப்பிப்பார்கள் அதன் பின்னர், சிறப்பாக பராமரிக்கும் பள்ளிகளை தேர்வு செய்து, பள்ளி  நிர்வாகத்தினை  பாராட்டி சான்றிதழ்களும், சுழற்கேடயமும் மாநகராட்சி நிர்வாகத்தால் வழங்கப்படும். எனவே மாணவ, மாணவியர்கள் ,ஆசிரியர் பெருமக்கள் அனைவரும் பள்ளி வளாகங்களை சுத்தமாகவும், பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என ஆணையாளர் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவ அலுவலர் பி.ஆர். முரளி சங்கர் ,  தாய்சேய் நல அலுவலர் திருமதி என்.சுமதி,  பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி பி.வி. சுகன்யா தமிழ்செல்வி, சுகாதார அலுவலர்கள் திரு.கே.ரவிச்சந்திரன் , திரு. எஸ்.சுரேஷ், சுகாதார ஆய்வாளர் திரு.எம்.சித்தேஸ்வரன் , சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்கள்  உள்பட பலர் கலந்து கொண்டனர்.