செய்தி வெளியீடு எண் :01, நாள் : 02.01.2018 தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை பணிகளை சிறப்பாக மேற்கொள்ளும் குடியிருப்போர் நலச்சங்கங்களை பாராட்டி பரிசுகள் வழங்கப்படும் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் தகவல்

செய்தி வெளியீடு எண் :01, நாள் : 02.01.2018 தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை பணிகளை சிறப்பாக மேற்கொள்ளும் குடியிருப்போர் நலச்சங்கங்களை பாராட்டி பரிசுகள் வழங்கப்படும் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் தகவல்

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், திடக்கழிவு மேலாண்மை பணிகளை சிறப்பாக மேற்கொள்ளும் குடியிருப்போர் நலச்சங்கங்களை கண்டறிந்து, அவர்களை பாராட்டி பரிசுகள் வழங்கப்படும் என 02.01.2018 அன்று சூரமங்கலம் மண்டலம் திருமால் நகர் குடியிருப்போர் நலச்சங்க விழாவில் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் தெரிவித்தார். 
சேலம் மாநகர பகுதிகளில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், பல்வேறு சுகாதார மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  குறிப்பாக திடக்கழிவு மேலாண்மை  செயலாக்கம், திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்த்து, தனி நபர் கழிப்பிடங்கள் கட்டுவதற்கான விழிப்புணர்வு பணிகள் , வீடுகளிலிருந்து சேகரிக்கப்படும் கழிவுகளை தரம் பிரித்து வழங்குவதற்கு தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  அதனடிப்படையில் குடியிருப்போர் நலச்சங்கங்கள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டதன் காரணமாக , மாநகர பகுதிகளில் உள்ள பல்வேறு குடியிருப்போர் நலச்சங்கங்கள் தூய்மை இந்தியா திட்ட பணிகளை மேற்கொள்ளுவதற்கு முன்வந்துள்ளன.  
சூரமங்கலம் மண்டலத்திற்குட்பட்ட கோட்டம் எண் 3 ல் உள்ள திருமால் நகர் பகுதி குடியிருப்போர் நலச்சங்கம் தாமாகவே  முன்வந்து,  வீடுகளில் சேரிக்கப்படும் கழிவுகளை மக்கும் மற்றும் மக்காத கழிவுகளாக தரம் பிரித்து, இரு வண்ணக் கூடைகளில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது பாராட்டுக்குரியதாகும்.  இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு தினந்தோறும் நேரடியாக சென்று, தரம் பிரித்து வழங்கப்படும் கழிவுகளை பெறுவதற்கு, சுகாதார பணியாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். மேலும் இப்பகுதிக்கென மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில்  இரண்டடுக்கு மூன்று சக்கர மின்கல மோட்டார் வாகனம் கழிவுகளை சேகரிப்பதற்காக வழங்கப்பட்டுள்ளது.  இப்பகுதியில் சேகரமாகும் மக்கும் தன்மை கொண்ட கழிவுகளை இயற்கையான உரம் தயாரித்திடும் வகையில் உரக்கிடங்குகள் பொதுமக்களின் ஒத்துழைப்போடு அமைப்பதற்கு மாநகராட்சி நிர்வாகத்தால்  நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இப்பகுதியில் குடியிருப்போர் நலச்சங்கம் பொதுமக்கள் பாதுகாப்பு நலன் கருதி, கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தியுள்ளது மிகவும் பாராட்டுக்குரிய நடவடிக்கையாகும். திருமால் நகர் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை சிறப்பாக மேற்கொண்டு, முன்மாதிரியான பகுதியாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பினை மாநகராட்சி நிர்வாகம் குடியிருப்போர் நலச்சங்கத்திற்கு வழங்கிடும். 
மேலும் மாநகர பகதிகளில் உள்ள பிற குடியிருப்போர் நலச்சங்கங்களும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், திடக்கழிவு மேலாண்மை பணிகளை சிறப்பாக செயல்படுத்திட முன்வர வேண்டும்.  அவ்வாறு சிறப்பாக செயல்படுத்திடும் குடியிருப்போர் நலச்சங்கங்களை பாராட்டி பரிசுகள் வழங்கப்படும் என ஆணையாளர் தெரிவித்தார்.  பின்னர் திருமால் நகரில் உள்ள 125 குடியிருப்புகளுக்கு கழிவுகளை தரம் பிரித்து வழங்குவதற்கு ஏதுவாக, பச்சை மற்றும் நீல நிற கூடைகளை மாநகராட்சி ஆணையாளர் வழங்கினார்.  
இந்நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் திரு.ஜி. காமராஜ், உதவி ஆணையாளர் திரு. ப. ரமேஷ்பாபு, மாநகர நல அலுவலர் மரு.வி. பிரபாகரன், சுகாதார அலுவலர்கள், திரு.எஸ். மணிகண்டன் திரு.கே. ரவிச்சந்திரன், திருமால் நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர்  திரு.எஸ். குப்புசாமி, செயலாளர் திரு.பி. பாபு, பொருளாளர் திரு.சி. சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.