சேலம் மாநகராட்சி பகுதிகளில் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள்

சேலம் மாநகராட்சி பகுதிகளில் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள்

சேலம் மாநகராட்சி பகுதிகளில் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக நோய் தடுப்பு வழிமுறைகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடிவடிக்கைகள் குறித்த விவரங்கள் பொதுமக்களை சென்றடையும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு பணிகள் மாநகராட்சி நிர்வாகத்தால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  அதனடிப்படையில்  பள்ளி மாணவ, மாணவியர்களைக் கொண்ட பேரணிகள் நடத்தப்பட்டு,   விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள் பள்ளி மாணவ, மாணவியர்களிடையே வழங்கப்பட்டு வருகிறது.  மேலும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள மாணவ, மாணவியர்களைக் கொண்டு டெங்கு தடுப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொள்ள மாநகராட்சி நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டதன் அடிப்படையில், (21.7.2017) அன்று 1 நாள் மட்டும்  16 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உட்பட்ட 47 பள்ளிகளில் 38 ஆயிரத்து 107 மாணவ, மாணவியர்கள் டெங்கு தடுப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டுள்ளனர்.
    மேலும் டெங்கு தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு பணிகள் பொது மக்களை எளிதில் சென்றடையும் வகையில், மாநகர் பகுதி முழுவதும் விநியோகம் செய்யப்படும் கேஸ் சிலிண்டர்கள், குடிநீர் கேன்களில் டெங்கு தடுப்பு  குறித்த விழிப்புணர்வு ஒட்டு வில்லைகள் ஒட்டி விநியோகம் செய்திட, சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியன் பேரில், மாநகர பகுதிகளில் விநியோகம் செய்யப்படும் கேஸ் சிலிண்டர்கள் மற்றும் குடிநீர் கேன்களில் விழிப்புணர்வு வில்லைகள் ஒட்டி பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மாநகராட்சி பகுதிக்குட்பட்ட அனைத்து வீடுகளிலும் டெங்கு தடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள், ஒட்டு வில்லைகள் மாநகராட்சி சுகாதாரத்துறையினரால் வழங்கப்பட்டு வருகிறது.  உணவு விடுதிகள், தேநீர் கடைகள், குளிர்பான கடைகள் , ஆட்டோக்கள், பேருந்துகள் ஆகியவற்றில் டெங்கு தடுப்பு குறித்த விழிப்புணர்வு வில்லைகள் ஒட்டப்பட்டு வருகிறது.
மாநகராட்சி பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தனி வீடுகள் ஆகியவற்றில் உள்ள மேல் நிலை நீர்த்தேக்க தொட்டிகள் சுத்தமாக பராமரிக்கப்பட்டு வருகிறதா என்பதனையும், தண்ணீர் சேகரிக்க பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கேன்கள்,  பாத்திரங்கள் உள்ளிட்டவை சுத்தம் செய்யப்பட்டு குடிநீர் சேகரிக்கப்பட்டு வருகிறதா என்பதனையும் மாநகராட்சி அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.  மேலும் பொது மக்கள் அதிகமாக கூடும் பேருந்து நிலையங்கள் , உழவர் சந்தைகள், 5 ரோடு சந்திப்பு, 4 ரோடு சந்திப்பு , திருக்கோவில் வளாகங்கள், திரை அரங்குகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள்  ஆகிய இடங்களில் டெங்கு தடுப்பு குறித்த விழிப்புணர்வு பதாதைகள் மாநகராட்சி நிர்வாகத்தால் அமைக்கப்பட்டு வருகிறது.
    மேலும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள 16 ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்கள் , செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள் உள்பட சுகாதாரத்துறையில் பணிபுரியும் அனைத்து நிலை பணியாளர்களும்  தயார் நிலையில் இருந்து பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை  அளித்திட  தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.  தேவையான மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.  எனவே  பொதுமக்கள் பருவ நிலைமாற்றத்தினால்  உடல் நிலைக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக தங்கள் பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று தகுந்த மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டு நலம் பெற வேண்டும் எனவும்,  மருத்துவரை கலந்தாலோசனை செய்யாமல் தாங்களாகவே சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டாம் என ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.