செய்தி வெளியீடு எண் : 168, நாள் : 21 .12.2017 சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களும் தினந்தோறும் உலர் கழிவுகளை தரம் பிரித்து மாநகராட்சி துப்புரவு பணியாளர்களிடம் வழங்கிட வேண்டும் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் தகவல்

செய்தி வெளியீடு எண் : 168, நாள் : 21 .12.2017 சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களும் தினந்தோறும் உலர் கழிவுகளை தரம் பிரித்து மாநகராட்சி துப்புரவு பணியாளர்களிடம் வழங்கிட வேண்டும் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் தகவல்

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் அனைத்து வணிக நிறுவனங்களும் 25.12.2017 முதல் உலர் கழிவுகளை தரம் பிரித்து, மாநகராட்சி துப்புரவு பணியாளர்களிடம் வழங்கிட வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
சேலம் மாநகராட்சி பகுதிகளில் செயல்பட்டு வரும் உணவகங்கள், பேக்கரிகள், தேநீர் விடுதிகள், திருமண மண்டபங்கள், திரையரங்குகள், தங்கும் விடுதிகள், பழக்கடைகள் வணிக வளாகங்கள்  மற்றும் வணிக ரீதியான அலுவலக வளாகங்கள் தங்கள் நிறுவனங்களில் சேகரமாகும் பிளாஸ்டிக்  கப்புகள், பிளாஸ்டிக் தட்டுகள், பேப்பர்கள் , அட்டைகள் , கண்ணாடி பாட்டில்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள், உடைந்த எலக்ட்ரானிக் பொருட்கள், பாட்டில் மூடிகள் , பால் கவர்கள், எண்ணெய் கவர்கள் ஆகிய உலர் கழிவுகளை தரம் பிரித்து, தனியாக சேகரித்து அவைகளை தினசரி துப்புரவு பணி மேற்கொள்ள வருகை தரும் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களிடம் வழங்கிட வேண்டும்.  இதன் மூலம் வணிக நிறுவனங்களிடமிருந்து கிடைக்கக்கூடிய உலர் கழிவு பொருட்கள் பொது இடங்களில் கொட்டப்படாமல்,  உலர் கழிவு சேகரிப்பு மையங்களை முறையாக சென்றடையும். 
 
எனவே தங்களது நிறுவனங்கள் / கடைகளில் சேகரமாகும் உலர் கழிவுகளை தரம் பிரித்து சேகரிக்காமல்  அவைகளை அருகில் உள்ள மழை நீர் வடிகால்களிலோ , சாக்கடை கால்வாய்களிலோ அல்லது காலி மனைகளிலோ கண்டிப்பாக கொட்டக் கூடாது.  மேலும் தங்களது நிறுவனங்களுக்கு அருகில் உள்ள கால்வாய்களில் வெளி நபர்கள்  யாரும் உலர் கழிவுகளை கொண்டு வந்து கொட்டாமல் கண்காணிப்பும் செய்திட வேண்டும். இதற்கு மாறாக மழைநீர் வடிகால்கள் , சாக்கடை கால்வாய்கள் மற்றும் காலிமனைகளில்   உலர் கழிவுகளை கொட்டுவோர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  எனவே அனைத்து வணிக நிறுவனங்களும் மாநகராட்சி மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருந்து, சேலம் மாநகராட்சி தூய்மையான மாநகராட்சியாக திகழ்வதற்கு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் கேட்டுக் கொண்டார்.