செய்தி வெளியீடு எண் : 167, நாள் : 20 .12.2017 சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலம் தொங்கும் பூங்கா வளாகத்தில் உலர் கழிவுகள் சேகரிப்பு மையத்தினை மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் 20.12.2017 அன்று துவக்கி வைத்தார்

செய்தி வெளியீடு எண் : 167, நாள் : 20 .12.2017 சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலம் தொங்கும் பூங்கா வளாகத்தில் உலர் கழிவுகள் சேகரிப்பு மையத்தினை மாநகராட்சி ஆணையாளர் திரு.ரெ. சதீஷ் அவர்கள் 20.12.2017 அன்று துவக்கி வைத்தார்

சேலம் மாநகராட்சி  பகுதிகளில் தூய்மை இந்தியா திட்டப் பணிள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திடக்கழிவு மேலாண்மை பணிகள் முறையாக மாநகராட்சி  பகுதி முழுவதும் தொய்வின்றி நடைபெற்று வருகிறது. நாள் 1 க்கு மாநகராட்சி பகுதிகளில் 350 லிருந்து 400 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. அவற்றில் 30 லிருந்து 40 சதவீதம் வரை பிளாஸ்டிக் போன்ற உலர் கழிவுகள் கலந்துள்ளது.  திடக்கழிவுகளை தரம் பிரிக்கும் பொருட்டு,  வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் தன்மை மற்றும் மக்காத தன்மைகளாக தரம் பிரித்து நீலம் மற்றும் பச்சை என இரு வண்ணக் கூடைகளில் வழங்குவதற்காகவும்,  அவ்வாறு வழங்கப்படும் கழிவுகளை வீடுகளுக்கே நேரடியாக சென்று துப்புரவு பணியாளர்கள்  சேகரித்து  வர, மூன்று சக்கர மின்கல மோட்டார் வாகனம் மாநகராட்சி பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
இந்நிலையில் வீடுகள், காலிமனைகள், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகள் மற்றும்  தேநீர் விடுதிகள் ஆகியவற்றில் கிடைக்கப்பெறும் பிளாஸ்டிக் உள்ளிட்ட உலர் கழிவுகளை முறையாக தரம் பிரித்து வழங்காமல், சாக்கடை கால்வாய்கள் மற்றும் மழை நீர் வடிகால்கள்   ஆகியவற்றில் கொட்டப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் போன்ற  உலர் கழிவுகளால் ஏற்படும் அடைப்பினால்  மழைக்காலங்களில் மழைநீர் முறையாக வெளியேற முடியாமல் குடியிருப்பு பகுதிகளுக்குள் சென்று விடுகிறது.  அதனால் தொற்றுநோய்கள்  ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அமைந்து விடுவதை தவிர்க்கும் பொருட்டு,  மாநகராட்சி நிர்வாகம் உலர் கழிவுகளை தனியாக தரம் பிரித்து, அவற்றை முறையாக அப்புறப்படுத்துவதற்கு ஏதுவாக, அனைத்து மண்டலங்களிலும் உலர் கழிவுகள் சேகரிக்கும் மையம் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பான  விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள பரப்புரையாளர்களுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.  
முதற் கட்டமாக அஸ்தம்பட்டி மண்டலம் கோட்டம் எண் 14 ல்  உள்ள  தொங்கும் பூங்கா வளாகத்தில்  உலர் கழிவுகள் சேகரிக்கும் மையம்  அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில்  உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் சிரட்டைகள், பேப்பர்கள், அட்டைகள், கண்ணாடி பாட்டில்கள் , பிளாஸ்டிக் பாட்டில்கள், எலக்ரானிக் பொருட்கள், அலுமினியப் பொருட்கள், இரும்பு கழிவுகள், பாட்டில் மூடிகள், எண்ணெய் மற்றும் பால் கவர்கள் போன்ற பொருட்களை தரம் பிரித்து முறையாக கையாளுவதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. உலர் கழிவுகளை தரம் பிரிப்பதற்கு தனித் தனி கூடைகள் இம்மையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே மாநகராட்சி பகுதி முழுவதும் வாரம் தோறும் புதன் கிழமைகளில், துப்புரவு பணியாளர்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு  நேரடியாக சென்று, உலர் கழிவுகளை சேகரிப்பார்கள். பொதுமக்கள் அனைவரும் தங்கள் குடியிருப்பு பகுதி மற்றும் தங்களது  நிறுவனங்களில்  கிடைக்கப்பெறும் உலர்கழிவுகளை துப்புரவு பணியாளர்களிடம் வழங்கிட வேண்டும்.  இதன் மூலம் மாநகர பகுதிகளில் கிடைக்ககக் கூடிய உலர் கழிவு பொருட்கள் பொது இடங்களில் கொட்டப்படாமல் உலர் கழிவு சேகரிப்பு மையங்களை முறையாக சென்றடையும்.  
எனவே சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள  பொதுமக்கள் பிளாஸ்டிக் உள்ளிட்ட உலர் கழிவுகளை முறையாக கையாண்டு, அவற்றினை அப்புறப்படுத்துவதற்கு மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என ஆணையாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.   
இந்நிகழ்ச்சியில் செயற்பொறியாளர்கள் திரு.அ. அசோகன், திரு.ஆர். ரவி,  திரு.ஜி. காமராஜ், உதவி ஆணையாளர்கள் திரு.ப. ரமேஷ்பாபு, திரு.ஏ.ஆர்.ஏ.ஜெயராஜ், திரு.கே.பி.கோவிந்தன், திரு.மு. கணேசன், மாநகர நல அலுவலர் மரு.வி. பிரபாகரன், உதவி செயற்பொறியாளர்கள் திரு.எம். செல்வராஜ், திரு.கே. செந்தில்குமார், திரு.என்.சுரேஷ்,  சுகாதார அலுவலர்கள்  மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.